ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசாரை தாக்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர், போலீசாரை தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பதியேற்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெக்கயபேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சாமினேனி உதயபானு. இவரது மகன் பிரசாத் நேற்று குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்து வீதிகளை மீறி சாலையில் காரை திடீரென்று திருப்பியுள்ளார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ரெட்டி, பிரசாத்தை ஓரம் கட்ட சொல்லி கண்டித்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பிரசாத், நான் யாரு தெரியுமா? எங்க அப்பா பேரு தெரியுமா? நான் எம்எல்ஏ மகன் என்னுடைய காரையா தடுத்து நிறுத்துகிறாய்?’’ என்று கேட்டு போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் போக்குவரத்து போலீசாரை பிரசாத் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, போலீசார் பிரசாத்தை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது பிரசாத் உடன் வந்திருந்த அவருடைய தாய், மனைவி, தங்கை ஆகியோரும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.