ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் இந்திக்கு ஆதரவாக பேசினார். அதே வேளையில் தமிழர்களை புகழ்ந்து ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
Chandrababu Naidu praising TamIlians: மும்மொழிக் கொள்கையை அடிப்படையாக கொண்ட தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு கூறி விட்டது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. தேசிய கல்விக்கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். திமுக மட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் பாஜக அரசு கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.
மு.க.ஸ்டாலின் கொளுத்திப் போட்ட தீ
இந்தி திணிப்பின் மூலம் மாநில மொழிகளை பாஜக அரசு அழிக்க முயல்வதாக மு.க.ஸ்டாலின் கொளுத்திப் போட்ட தீ இப்போது பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள மத்தியில் பாஜக ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் மும்மொழிக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியை கற்றுக் கொள்வது நல்லது
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ''இந்தியை கற்பதும் நல்லது. அப்போது தான் அனைத்து மக்களுடன் கலந்திருக்க முடியும். ஆந்திராவில் 3 மொழிகள் மட்டுமல்ல பல மொழிகளை கற்றுத் தர இருக்கிறோம். ஆந்திராவில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் 10 மொழிகளை பயிறுவிக்க உள்ளோம். பல மொழிகளை கற்றுக் கொண்டால் வெளியே பல இடங்களுக்கு சென்று வேலை செய்யலாம். அதே வேளையில் தாய் மொழியான தெலுங்கை கற்க தொடர்ந்து ஊக்கப்படுத்துவோம். வாழ்வாதாரத்துக்கு தேவையான சர்வதேச மொழியான ஆங்கிலத்தையும் கற்றுக் கொடுப்போம்'' என்றார்.
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவு! லிஸ்ட் போட்ட அரசு! எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி!
தமிழர்களை புகழ்ந்த சந்திரபாபு நாயுடு
தொடர்ந்து தமிழ்நாடு குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, ''தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படுகின்றனர். கூகுள் தலைமை அதிகாரி (சுந்தர் பிச்சை) கூட தமிழர்தான். முன்பெல்லாம் ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றாலே தமிழர்கள் தான் என்ற நிலை இருந்தது. இப்போது உலகில் பெரிய பொறுப்புகளில் தமிழர்கள் உள்ளனர். இதற்கு காரணம் அவர்களின் திறமை தான். எனவே அறிவு வேறு; மொழி வேறு'' என்று கூறியுள்ளார்.
பாஜகவுக்கு மறைமுக கருத்து
சந்திராபு நாயுடுவின் கருத்து இருவேறு விதமாக அமைந்துள்ளது. அதாவது இந்திக்கு ஆதரவாக பேசிய அவர் இந்தி என்பதையும் தாண்டி மற்ற மொழிகளையும் கற்கலாம் என பாஜகவுக்கு சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்கள் ஆங்கிலம் படித்ததால் தான் உலகளவில் உயர்ந்து நிற்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளது, இந்தியை விட ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அவர் பறைசாற்றுவதுபோல் உள்ளது. தமிழர்கள் குறித்த சந்திரபாபு நாயுடுவின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெட்கக்கேடு! தமிழகத்திற்கு தலைகுனிவு! முதல்வர் ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை!
