Asianet News TamilAsianet News Tamil

அந்த புள்ளைங்க கனவ கருவிலேயே சிதைச்சிட்டிங்களே... இந்த கொடிய தாக்குதலை நியாயப்படுத்த ஒரு காரணம் கூட இல்லையே; அன்புமணி வேதனை

ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு கருவிலேயே சிதைக்கப்பட்டிருக்கிறது. இது சமூகநீதி மீதான கொடிய தாக்குதல் என அன்புமணி தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

Anbumani emotional statements against Neet exam
Author
Chennai, First Published Jul 8, 2019, 10:58 AM IST

ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு கருவிலேயே சிதைக்கப்பட்டிருக்கிறது. இது சமூகநீதி மீதான கொடிய தாக்குதல் என அன்புமணி தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஷியா ஆகிய இருவருமே மருத்துவம் படித்து மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பியவர்கள். ஆனால், அபத்தமான கொள்கையின் அடிப்படையில் திணிக்கப்பட்ட நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் தங்களின் உயிர்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களின் தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வு தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். ஆனால், வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் ஏற்பட்ட சாதாரண சறுக்கல்களுக்கான வாழ்க்கைப் பயணத்தையே அம்மாணவிகள் முடித்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ள இதயம் மறுக்கிறது; வலிக்கிறது.

திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வைஷியாவும் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் கடுமையாக உழைத்து மீண்டும் ஒருமுறை நீட் தேர்வு எழுதியிருந்தால் அதிக மதிப்பெண்களையும் எடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கலாம். மாறாக, தங்கள் மீதே நம்பிக்கையின்றி தற்கொலை செய்து கொண்டு பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தீராத துயரத்தை ஏற்படுத்தியுள்ளனர். நீட் தேர்வு பின்னடைவிற்காக இது போன்ற தவறான முடிவுகளை இனியும் எந்த மாணவரும் எடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாடு முழுவதுமுள்ள, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைத்தது நீட் தேர்வு தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அரியலூர் மாணவி அனிதாவில் தொடங்கி இப்போது ரிதுஸ்ரீ, வைஷியா வரை பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு நீட் தேர்வு தான் காரணமாக இருந்திருக்கிறது. மத்திய அரசு கூறுவதைப் போன்று நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயருகிறது என்பதையோ, மருத்துவக் கல்வி கட்டாயமாக்கப் படுகிறது என்பதையோ எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாறாக, லட்சக்கணக்கில் செலவழித்து புகழ்பெற்ற நிறுவனங்களில் சேர்ந்து தனிப்பயிற்சி பெற்றால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதன் மூலம், ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு கருவிலேயே சிதைக்கப்பட்டிருக்கிறது. இது சமூகநீதி மீதான கொடிய தாக்குதல் ஆகும்.

நீட் தேர்வை நியாயப்படுத்துவதற்கு ஒரே ஒரு காரணம் கூட இல்லை என்பது தான் உண்மை. எனவே, பிடிவாதமாக இனியும் நீட் தேர்வுகளை நடத்தி, மாணவ, மாணவியரின் தற்கொலைகளை தொடர்கதையாக்காமல், நீட் தேர்வை ரத்து செய்து சமூகநீதியை மலரச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017&ஆம் ஆண்டு நிறைவேற்றி அனுப்பப் பட்ட இரு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனே பெற்றுதர வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios