அம்ரபலி ரியல் எஸ்டேட் நிறுவன மோசடியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தோனியிடமும் விசாரணை நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் அம்ரபலி. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் வீடு வாங்குபவர்களிடமிருந்து, கோடிக்கணக்கில் பணம் வாங்கி அதனை தனது குழுமத்தின் பிற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இது போல சுமார் ரூ.5,619 கோடிக்கு மோசடி நடந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், வீடு வாங்க பணம் கொடுத்தவர்களுக்கு இதுவரை அம்ரவலி வீடு கட்டித்தராததால் அவர்கள் நீதிமன்ற சென்றுள்ளனர். இந்த வழக்கில் அம்ரபலி நிறுவனத்தின் சேர்மேன் உள்ளிட்ட நிர்வாகிகளை உடனடியாக கைது செய்யும்படி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல இவர்களுக்கு சொந்தமான முறைகேடான சொத்துக்களை முடக்கவும், அம்ரபலி குழுமம் கட்டிய வீடுகள் குறித்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

அம்ரபலி குழுமமானது, அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு முறைகேடாக பணம் அனுப்பி உள்ளது தெரிகிறது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தோனியின் மனைவி சாக்‌ஷிதான் இயக்குனர் என்பதும் கூடுதல் தகவல்கள். மஹி டெவலப்பர் நிறுவனத்தில் 25 சதவீத பங்குகள் சாக்‌ஷி பெயரிலும், மீதமுள்ள 75 சதவீத பங்குகள், அம்ரபலி சேர்மன் அனில் குமார் சர்மாவும் வைத்துள்ளனர். தோனியும் கூட இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ளதுதான் கொடுமையின் உச்சம். இதனால்தான் தோனி தற்போது சிக்கலில் இருக்கிறார்.

மக்களிடம் பெற்ற பணத்தை வீடு கட்டி தராமல், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அம்ரபலி குழுமம் அனுப்பி உள்ளது. அதை வைத்துதான் இந்த இரண்டு நிறுவனங்கள் இத்தனை நாட்கள் இயங்கி வந்துள்ளது. இதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி, ஏமாற்றி வியாபாரம் செய்து இருக்கிறார்கள். மக்களுக்கு வீடு கட்டி கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே இந்த வழக்கில் தோனியிடமும் அவரது மனைவி சாக்‌ஷியிடமும் விசாரணை நடத்தப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் வலுத்துவருகிறது. தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும் இனிமேல் இந்திய அணியில் அவருக்கு இடமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. வர்த்தக நலன்களை கருத்தில்கொண்டு தோனி ஓய்வுபெறாமல் இருக்கிறார் என்ற தகவல் தோனியின் இமேஜை ஏற்கனவே டேமேஜ் செய்துகொண்டிருக்கும் நிலையில், அவருக்கு கூடுதலாக இந்த பிரச்னை வேறு..