amitsha discussion with uttav thakare
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மும்பையில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து , ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தமுக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொது வேட்பாளர்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சினையில் இதர கட்சி தலைவர்களுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தற்போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பா.ஜனதாவை வலுப்படுத்தி வருகிறார்.
ஆதரவு கோரினார்
இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சு வார்த்தையின்போது பா.ஜனதா முன்மொழியும் வேட்பாளரை ஆதரிக்கும்படி அப்போது தாக்கரேவிடம் அமித்ஷா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
விரும்பும் வேட்பாளருக்கு
சிவசேனா பா.ஜனதா கட்சியின் நீண்ட நாள் கூட்டணி கட்சி என்றாலும், ஜனாதிபதி தேர்தலின்போது கூட்டணி முடிவுக்கு மாறாக தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஏற்கனவே ஆதரவு அளித்து வந்துள்ளனர்.
கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களின்போதும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதிபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜியை சிவசேனா ஆதரித்து இருந்தது நினைவு கூறத்தக்கது.
ஆதரிக்குமா?
அதுவும் குறிப்பாக தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த ஜனாதிபதி தேர்தலில் தங்கள் முடிவு தனி பாணியாகவே இருக்கும் என்றும், உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறி இருந்தார்.
எனவே இந்த சூழ்நிலையில் பா.ஜனதா வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
