டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க - பாஜக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உட்பட பாஜகவின் 5 வேட்பாளர்களும் தோல்வியடைந்ததற்கு, அ.தி.மு.க அமைச்சர்கள் சரியாக தேர்தல் வேலை பார்க்காதது தான் காரணம் என்று, மாநில பாஜக நிர்வாகிகள் சிலர் அமித் ஷாவின் பார்வைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், எந்த `ரெஸ்பான்ஸும் மேலிடத்தில் இருந்து இல்லை.

 

இதனிடையே, கடந்த ஜூலை 15-ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களாக அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அமித் ஷாவை சந்தித்த வேளையில், மக்களவை தேர்தலில் தன் மகன் வெற்றி பெற்ற பிறகு அமித் ஷாவையோ, பிரதமரையோ துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவில்லை. 

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டாவையும் நேரில் சந்தித்து பேசினார். தற்போதைய தமிழக அரசியல் நிலவரம், உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அமித் ஷாவிடம் அவர் ஆலோசித்தாக கூறப்படுகிறது. மேலும், சில மத்திய அமைச்சர்களை பன்னீர்செல்வம் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.