கொல்கத்தாவில் உள்ள ஷாகிதத் மினார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: 2021-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும். இந்த மண்ணின் மைந்தர்தான் அடுத்த முதல்வராக வருவார். மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை மக்களையும், அகதிகளையும் தவறாக வழிநடத்தி வருகிறது. நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்தால், எந்த ஒரு நபரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் சேர்ந்து சிறுபான்மை மக்களைப் பதற்றத்தில் வைத்துள்ளன. குடியுரிமை வழங்கத்தான் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல என்று சிறுபான்மை மக்களிடம் நான் உறுதியளிக்கிறேன். மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது. அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக பெரும்பான்மை பெறும். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக 87 லட்சம் வாக்குகள் பெற்றது, 2019-ம் ஆண்டில் உங்கள் அன்பையும், ஆதரவையும் எங்களுக்கு அளித்ததால், 2.30 கோடி வாக்குகள் கிடைத்தது. ஆதலால், கூறுகிறேன், எங்கள் வெற்றி நடையைத் தடுக்க முடியாது.

மம்தா பானர்ஜி குடும்ப ஆட்சிக்கு வித்திடுகிறார். அவரின் உறவினர் அபிஷேக்கை முன்னிலைப்படுத்த விரும்புகிறார். ஆனால், அதுபோல் மே.வங்கத்தில் ஏதும் நடக்காது. எந்த இளவரசரும்ம் மே.வங்கத்தின் முதல்வராக அடுத்த முறை வர முடியாது. இந்த மண்ணின் மைந்தர்தான் அடுத்த முதல்வராக வருவார்
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்