மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முன்னதாக, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது.

இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிப்பூர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்படுகின்றன. மணிப்பூர் வன்முறையில் சிக்கி, இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்பட்டுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மணிப்பூர் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு கூடிய விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமரின் மவுனம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன, வன்முறையால் மாநிலத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்துள்ள அமித் ஷா இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டெல்லியில் ஷாவை சந்தித்த அடுத்த சில மணி நேரங்களிலேயெ இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வடகிழக்கு பிரிவான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கடந்த 10ஆம் தேதியன்று மணிப்பூர் சென்று, அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் பல முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்தார்.

நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் மணிப்பூர் வன்முறைக்கான தீர்வு காணப்படுவது குறித்து பேசப்படும் என உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமித் ஷா விளக்குவார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், மணிப்பூருக்கு நான்கு நாட்கள் பயணமான சென்ற அமித் ஷா, அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தார். நிவாரண முகாம்களில் உள்ள மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.