வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பையேற்று பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் நியூயார்கில் தொடங்கியது. நியூயார்க்கில் எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
இதையடுத்து, பிரதமர் மோடி தனது நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்நாட்டு அரசு சார்பில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்த பிரதமர் மோடி, வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், சீனா விவகாரம், ஆசிய பசுபிக் பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விரிவாக பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எங்கள் உறவு அரசாங்கள் தொடர்பானது மட்டுமல்ல: ஜில் பைடன்!
இதையடுத்து, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் அரசு சார்பில் இரவு விருந்து அளிக்கவுள்ளனர். நாளையும் அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிகிறது. தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கையால் செய்யப்பட்ட, பழமையான American book galley-யை அதிகாரப்பூர்வ பரிசாக வழங்குவார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவின் காப்புரிமையின் காப்பக தொலைநகர் அச்சு, அமெரிக்க வனவிலங்கு புகைப்படம் பற்றிய ஹார்ட்கவர் புத்தகம், பழங்காலா அமெரிக்க கேமிரா ஆகியவற்றை ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்குவார் எனவும், ராபர்ட் ஃப்ரோஸ்ட் கையொப்பமிடப்பட்ட அவரது பாடல்கள் அடங்கிய தொகுப்பின் முதல் பதிப்பை ஜில் பைடன் பிரதமர் மோடிக்கு வழங்குவார் எனவும் தெரிவித்துள்ளது.
இந்திய நடன ஸ்டுடியோவான ஸ்டுடியோ தூம் நடனக் கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட இசை நடன நிகழ்ச்சியை அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன், பிரதமர் மோடி ஆகியோர் கண்டு களித்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.