எங்கள் உறவு அரசாங்கள் தொடர்பானது மட்டுமல்ல: ஜில் பைடன்!
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு அரசாங்கள் தொடர்பானது மட்டுமல்ல என்று அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் தெரிவித்துள்ளார்
அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிறகு, பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கவுள்ளனர்.
இதனிடையே, விர்ஜினியா மாகாணம் அலக்சாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளையை அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது பேசிய அவர்கள், கல்வி மற்றும் தொழிலாளர்களுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் பகிர்ந்துள்ள முன்னுரிமையை எடுத்துரைத்தனர். அவர்களுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோரும் உடனிருந்தனர்.
ஜில் பைடன் பேசுகையில், “இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு அரசாங்கங்கள் தொடர்பானது மட்டுமல்ல. எங்கள் இரு நாடுகளின் பிணைப்பை உணர்ந்த, உலகம் முழுவதும் பரவியிருக்கும் குடும்பங்கள் மற்றும் நட்புகளை நாங்கள் கொண்டாடுகிறோம். உலகளாவிய சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிப்பதால், அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மை ஆழமானது, விரிவானது.” என்றார்.
“நமது பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டுமெனில், நமது எதிர்காலமான இளைஞர்களிடம் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்த ஜில் பைடன், அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜோ'ஸ் இன்வெஸ்டிங் இன் அமெரிக்கா நிகழ்ச்சி மூலம், சுத்தமான எரிசக்தி மற்றும் உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் தொழில்களில் மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.” என்றும் ஜில் பைடன் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய பிரதமர் மோடி, “நாங்கள் பள்ளிகளில் சுமார் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை நிறுவியுள்ளோம், அதில் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கண்டுபிடிப்புகளுக்கான அனைத்து வகையான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த தசாப்தத்தை தொழில்நுட்ப தசாப்தமாக மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியா-அமெரிக்க ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்குவது பற்றி யோசிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களுடன் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோரின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வி வலைப்பின்னல்களின் உலகளாவிய முன்முயற்சியை 2015இல் தொடங்கினோம். இதன் கீழ், அமெரிக்காவிலிருந்து 750 ஆசிரியர்கள் இந்தியா வந்துள்ளனர் என்பதை உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.
வாஷிங்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி - கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு!
“ஒருபுறம், அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மறுபுறம், இந்தியாவில் உலகின் மிகப்பெரிய இளைஞர்கள் வளம் உள்ளது. அதனால்தான், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.