வாஷிங்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி - கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு!
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்தார்
பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் நியூயார்கில் தொடங்கியது. நியூயார்க்கில் எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல.. அது ஒரு வாழ்க்கைமுறை’ என்றார். பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி தனது நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்குள்ள விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்தபோது, அங்கு மழை பெய்தது, கொட்டும் மழையிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி தான் தங்கவுள்ள ஹோட்டலுக்கு சென்றார். அவரை காண வழிநெடுகிலும் காத்திருந்த இந்திய வம்சாவளியினர் மோடி... மோடி... என கோஷம் எழுப்பினர். அவர் தங்கவுள்ள ஹோட்டல் அருகேவும் திரண்டிருந்து மோடி கோஷம் எழுப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர். இதையடுத்து, காரில் இருந்து இறங்கு அவர்களை பார்த்து கை அசைத்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.
வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிறகு, பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கவுள்ளனர்.