டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய், சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஜூன் 11ம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பிரதமர் மோடி இரண்டுமுறை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று தனித்தனியாக சென்று வாஜ்பாயின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

அமித் ஷாவும் ராஜ்நாத் சிங்கும் திடீரென மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். வாஜ்பாயின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை மருத்துவமனை சார்பில் வெளியிடப்படவில்லை.