Asianet News TamilAsianet News Tamil

நியூஸ் க்ளிக் வழக்கு: அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூஸ் க்ளிக் வழக்கு தொடர்பாக அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது

American millionaire Neville Roy Singham summoned by Enforcement Directorate on News Click row smp
Author
First Published Nov 16, 2023, 1:14 PM IST | Last Updated Nov 16, 2023, 1:14 PM IST

டெல்லியைச் சேர்ந்த நியூஸ் கிளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக  நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அதில், நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் தூதரக அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஓய்வுபெற்ற பல்துறையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 255 பேர் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதினர். அதில், நியூஸ் கிளிக் இணையதளம் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மேலும், நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்கள், அதன் பத்திரிகையாளர்கள், ஊழியர்களின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணமோசடி மற்றும் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பாக அந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் செய்தி இணையதளமான NewsClick உடன் தொடர்புடைய பணமோசடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கத்துக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளது.

பாலஸ்தீன சார்பு போராட்டங்களுக்கு நிதியளிக்கும் நெவில் ராய் சிங்கம்!

இந்தியாவில் சீனப் பிரச்சாரத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்படும் அவர், தற்போது சீனாவின் ஷாங்காய் நகரில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வெளிவிவகார அமைச்சகம் (MEA) வழியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின் கீழ் நெவில் ராய் சிங்கத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2021 இல் விசாரணை தொடங்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு அவருக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவரது வாதங்களை பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு, உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து வெளிநாட்டு நீதிமன்றத்திற்கு ஒரு முறையான கோரிக்கை வைக்கும் Letters Rogatoryயை டெல்லி நீதிமன்றம் வழங்கிய பின்னர் தற்போது இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மீறல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் நெவில் ராய் சிங்கத்தின் பெயர் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீனப் பிரச்சாரத்தை ஒளிபரப்ப நிதியுதவி பெறுவதற்கு சீனாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நியூஸ்க்ளிக், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios