அமெரிக்க அதிபர் டிரம்பின் 6அடி சிலையை தயாரித்து, அதற்கு தினமும் அபிஷேகம் செய்கிறார், தெலங்கானாவை சேர்ந்த விவசாயி.

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா (32). விவசாயி., அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின், தீவிர ரசிகர். விவசாயி புஸ்சா கிருஷ்ணா, தனது வீட்டில், அதிபர் டிரம்புக்கு சிலை அமைக்க முடிவு செய்தார்.

அதன்படி, ரூ.1.3 லட்சம் செலவில் 6அடி உயரமுள்ள டிரம்ப் சிலை, சமீபத்தில் தயார் செய்யப்பட்டது. அந்த சிலையை வீட்டில் வைத்த அவர், தினமும் பால்  அபிஷேகம் செய்து வழிபடுகிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு, டிரம்ப் சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பதுபோல் கூறுகிறார்.

இதுபற்றி கிரு‌‌ஷ்ணா கூறுகையில், ‘‘டிரம்ப் ஒரு வலிமையான தலைவர். அவரது துணிச்சலான செயல்பாடு எனக்கு பிடிக்கும். எனவே, அவரை வழிபடுகிறேன். என் வாழ்வில் ஒருநாள் அவரை நான் நிச்சயம் சந்திப்பேன்’’ என்றார்.