ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ள இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ள இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.

முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. ரஷ்யாவுடன் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ள இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 400 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்- 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.

இதற்கு தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தற்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியிருக்கும் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. பொதுக்குழு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை அடுத்து இந்தியாவுக்கு எதிராக கருத்துக்கள் வலுத்தன. அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொனால்டு லூ, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ள இந்தியா மீது பொருளாதார தடை நடவடிக்கையை பயன்படுத்துவதா? அல்லது விலக்குவதா? என்பது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
