தேசியக்கொடியின் வணத்தில் கால்மிதியடிகள், மகாத்மாகாந்தியின் உருவம் பதித்த செருப்புகளை விற்பனைக்கு வெளியிட்ட அமேசான் ஆன்-லைன் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் எம்.பி.க்கள் நேற்று கோரிக்கை விடுத்தனர். \
அமேசான் நிறுவனம் சமீபத்தில், இந்திய தேசியக் கொடி வண்ணத்தில் கால் மதியடிகளையும், காந்தியின் புகைப்படம் பதித்த செருப்புகளையும் கனடா நாட்டில் ஆன்-லைனில் விற்பனைக்கு வைத்தது. இது குறித்து இந்தியர்கள் அளித்த தகவலின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அமேசான் நிறுவனத்தை கடுமையாக எச்சரிக்கை செய்து, கண்டித்தது. இதையடுத்து, அந்த பொருட்களை வாபஸ் பெற்ற அமேசன் நிறுவனம், மத்திய அரசிடம் மன்னிப்பு கோரியது.
இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்த செயல்பாடுகள் குறித்து மாநிலங்கள் அவையில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். தேசிய சின்னங்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில், பொருட்களை விற்பனை செய்ய அமேசான் நிறுவனத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?, இதுபோன்ற அவமதிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வழி இருக்கிறதா?, அரசு அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா? என எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க எந்தவிதமான சர்வதேச ஒப்பந்தங்களும் இல்லை. ஆனால், கடந்த 1950 மற்றும் 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, தேசிய சின்னங்களுக்கு அவமதிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அமேசான் நிறுவனம் செய்த செயல் என்பது கனடா, அமெரிக்கா இரு நாடுகளிலும் நடந்துள்ளது. இந்த தகவல் நமக்கு கிடைத்தவுடன், கனடாவின் ஒட்டா நகர், மற்றும், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இந்த விசயத்தை கூறி, நடவடிக்கை எடுக்கக் கூறினோம்.
அமேசான் நிறுவனத்தை நடத்தி வரும் ஜெப் பிஜாஸிடம் இந்த தகவலை கொண்டு சென்றோம். இது குறித்து அமேசான் நிறுவனமும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பாக கடிதம் மூலம் அரசுக்கு தெரிவித்து, மீண்டும் இதுபோல் நடக்காது என்று உறுதியளித்துவிட்டது.
அதசமயம், நமது நாட்டின் தேசிய சின்னங்களுக்கு கலங்கம் ஏற்படாதவாறும், உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அரசு நடவடிக்கைகள் எடுக்கும்'' எனத் தெரிவித்தார்.
