அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் பக்தர்கள் தங்களின் பயணத்தை முடித்துக்கொண்டு காஷ்மீரை விட்டு உடனே வெளியேறுமாறு ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

காஷ்மீரின் அமர்நாத் கோயில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டுக்கான யாத்திரை தற்போது நடந்து வருகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவடையவுள்ளது. யாத்திரையையொட்டி, காஷ்மீரில் தற்போது ஆயிரக்கணக்கான யாத்திரை பக்தர்கள் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அந்த மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறையிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, அமர்நாத் யாத்ரீகர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியிருக்கும் யாத்ரீகர்கள் தங்களது பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இதேபோல், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, ஊர் திரும்புமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.