சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய உத்தரவு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசு உத்தரவை அதிரடியாக ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இருவருமே மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த மோதல் உச்சக் கட்டத்தை அடைந்ததை அடுத்து, மத்திய அரசு, அவர்களது அதிகாரங்களையும் பறித்து இருவரையும் கடந்த அக்டோபர் மாதத்தில் கட்டாய விடுப்பில் அனுப்பியது. 

இதனையடுத்து சி.பி.ஐ., இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அலோக் குமார் வர்மா வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியாததால், அதிகாரத்தைப் பறித்ததாக வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை கடந்த மாதம் 6-ம் தேதி ஒத்திவைத்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி இல்லாததால் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் இன்று தீர்ப்பு வழங்கினார். 

இந்த தீர்ப்பில் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன், உடனடியாக பொறுப்புகளை வர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் தலைமை நீதிபதி அடங்கிய குழு தான் முடிவு எடுக்க வேண்டும். அந்த குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதுவரை அலோக் வர்மா முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.