ஞானவாபி மசூதி வழக்கு: அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை!
ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர்பான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கவுள்ளது

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி, ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே, தொல்லியல் ஆய்வு குறித்த விசாரணையை அவசர முறையீடாக எடுத்து கொண்டு விசாரிக்க வேண்டும் என அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின்போது முறையிடப்பட்டது.
ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி!
இதனை ஏற்றுக் கொண்டு, அதனை அவசர முறையீடாக விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்காலத் தடை விதித்தது. மேலும், மசூதி கமிட்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யவும் அறிவுறுத்தியது. விசாரணையின்போது, மசூதி வளாகத்தில் எவ்வித ஆக்கிரமிப்பு பணிகளையும் இந்திய தொல்லியல் துறை மேற்கொள்ளக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ஜூலை 25ஆம் தேதி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பிரிதிங்கர் திவாகர், மசூதி வளாகத்தில் தொல்லியல் ஆய்வுக்கான தடையை ஜூலை 27ஆம் தேதி (இன்று) வரை நீட்டித்தார். மேலும், வழக்கின் விசாரணையை இன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளார். அதன்படி, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர்பான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கவுள்ளது.
நேற்றைய விசாரணையின்போது, இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான அதிகாரி, மசூதியின் கட்டமைப்பை எந்த வகையிலும் அழிக்கப்போவதில்லை என தெரிவித்தார். மசூதி கமிட்டியின் வாதத்தை கேட்ட நீதிபதி, விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளி வைத்துள்ளார்.
ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.