ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கான தடை நீட்டிப்பு: அலகாபாத் உயர் நீதிமன்றம்!
ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கான தடையை நீட்டித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுக்கு ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்காலத் தடை விதித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மசூதி கமிட்டிக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரிதிங்கர் திவாகர், மசூதி வளாகத்தில் தொல்லியல் ஆய்வுக்கான தடையை ஜூலை 27ஆம் தேதி (நேற்று) வரை தொல்லியல் ஆய்வுக்கான இடைக்காலக் தடையை நீட்டித்தார்.
ஜி20 பருவநிலை மாநாடு: தமிழில் வணக்கம் சொல்லி பேசிய பிரதமர் மோடி!
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நேற்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரிதிங்கர் திவாகர், ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கான தடையை வருகிற ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். நேற்றைய விசாரணையின் போது, தொல்லியல் ஆய்வானது மசூதியின் கட்டமைப்பிற்கு சேதம் விளைவிக்கும் என்று தனது அச்சத்தை மசூதி கமிட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெளிப்படுத்தினார்.
முன்னதாக, ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு முன்பு நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின் போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை விடுத்து மற்ற இடத்தில் தொல்லியல் துறையின் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.