அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை ஏன் தாமதம்? ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
கொரோனா காரணமாக அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை ( AISHE) வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், “அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையை (AISHE) வெளியிடுவதில் அதிக தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? AISHE அறிக்கையை வெளியிட அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” என்று விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE) என்பது நாட்டில் உள்ள உயர்கல்வி புள்ளிவிவரங்களின் விரிவான தரவு ஆகும். மாணவர் சேர்க்கை , நிறுவனங்கள் குறித்த தகவல், ஆசிரியர்கள் பற்றிய தகவல் போன்ற பல்வேறு அளவுருக்கள் பற்றிய தரவுகள், AISHE இன் கீழ் பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களால் (HEIs) அதற்கென உருவாக்கப்பட்டுள்ள தளத்தில் ஆண்டுதோறும் பதிவேற்றப்படுகின்றன.
AISHE கணக்கெடுப்பு மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம் நடத்தப்படுகிறது. 2019-20 கணக்கெடுப்பின் அறிக்கை வெளியிடுவதும், 2020-21 கணக்கெடுப்புக்கான ஆய்வு தொடங்குவதும் முன்னெப்போதும் இல்லாத உலகளாவிய கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டன. 2020-21 ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையால் கணிசமாகத் தாமதமானது. டிசம்பர், 2020 வரை கூட அது நீட்டிக்கப்பட்டது. சில இடங்களில் அதற்குப் பிறகும் கூட நடந்தது.
மாணவர் சேர்க்கை செயல்முறை முழுமையாக முடிந்த பின்னரே பாடவாரியான/நிரல்கள் வாரியான மாணவர் சேர்க்கை பற்றிய விரிவான தரவு உயர்கல்வி நிறுவனங்களால் அளிக்கப்படும். மேலும், 2021 ஆம் ஆண்டில் 2 ஆவது கோவிட் அலை கடுமையாக வெடித்தது, இதில் பல்வேறு துறைகள், மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் கணக்கெடுப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
AISHE 2020-21 இல், தரவு சேகரிப்பு பொறிமுறையானது, அடோப் அக்ரோபேட் வடிவமைப்பில் உள்ள தரவு நிரப்புதலின் பழைய அமைப்பிலிருந்து, பயனருக்கு எளிதான தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட வலைத் தரவுப் பிடிப்பு வடிவத்திற்கு (DCF) தேசிய தகவல் மையத்தால் (NIC) மேம்படுத்தப்பட்டது.
2024 தேர்தல்: டெல்லியில் காங்., - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு என்னவாக இருக்கும்?
2019-20 வரை, AISHE இல் தரவு சேகரிப்புக்கு Adobe மென்பொருள் (windows 2008) பயன்படுத்தப்பட்டது, இது கிளவுட் சர்வருக்குப் பதிலாக நேரடியான சர்வரில் சேமிக்கப்பட்டது. எனவே, NIC IT இன்ஃப்ரா-கொள்கைக்கு இணங்கவும், புதிய தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் AISHE போர்ட்டலை மேம்படுத்தவும், Web-DCF ஆனது AISHE இல் 2021 ஆம் ஆண்டில் தகவல்களைச் சேகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டு AISHE இல் 2020-21 கணக்கெடுப்புக்கு முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக, செயல்பாட்டுச் சோதனையைத் தொடர்ந்து, அமைப்பின் விரிவான பாதுகாப்புத் தணிக்கை மற்றும் புதிய அமைப்பைச் செயல்படுத்துவதற்கு முன் மாநில நோடல் அதிகாரிகள்/ உயர்கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
முதல் DCF கணக்கெடுப்பு என்பதால், முந்தைய தரவு அமைப்பு மற்றும் அறிக்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.இது ஆய்வின் யூனிட் அளவிலான தரவுகளுடன் சோதிக்கப்பட வேண்டும்/பொருத்தப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, கணக்கெடுப்பு முடிந்ததும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
AISHE 2020-21 அறிக்கை, ஏற்கனவே ஜனவரி 2023 இல் வெளியிடப்பட்டது. 2019-20 இல் நாட்டின் மாணவர் சேர்க்கை 3.85 கோடியிலிருந்து 2020-21ல் 4.14 கோடியாக அதிகரித்துள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.