2024 தேர்தல்: டெல்லியில் காங்., - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு என்னவாக இருக்கும்?
டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் பட்சத்தில், தொகுதி பங்கீடு விகிதம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஓரனியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது. (I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance). இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி என்று பொருள்படும் வகையில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளிடையே பல்வேறு முரண்கள் உள்ளன. டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தால் இந்தக் கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெறுவது சந்தேகமாகவே இருந்தது. ஆனால், காங்கிரஸ் நிலைப்பட்டை தொடர்ந்து, பெங்களூரு கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொண்டது. இதனால், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்து பயணிப்பது உறுதியாகியுள்ளது.
சமீபத்திய வளர்ச்சிகளின்படி, 2024 தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தொகுதிகளை பங்கிட்டு கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஆம் ஆத்மியின் தளமான டெல்லியில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டியே நிலவி வருகிறது. எனவே, டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் பட்சத்தில், அங்கு எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், அவ்விரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு விகிதம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லியில் மொத்தம் ஏழு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றது. 2014 தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2019 தேர்தலில் 5 இடங்களில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. அதற்கு முன்பு, 2009இல் ஏழு இடங்களிலும், 2004இல் 6 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.
2014 தேர்தலின் போது, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் பாஜகவை விட அதிகமாக இருந்தது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் கூட்டு வாக்கு சதவீதத்தை விட பாஜக பெற்ற வாக்கு சதவீதம் அதிகம். இதுபோன்று கடந்த கால செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது கடினமாகவே இருக்கும்.
ஆனால், வாக்குப் பங்கின் அடிப்படையில் மட்டும் தேர்தல் முடிவுகள் கணிக்கப்படுவதில்லை. கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களும் முக்கிய பங்காற்றுகிறார்கள். 2019 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக வலிமையான வேட்பாளர்களை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளுமே நிறுத்த தவறிவிட்டன.
அந்த சமயத்தில், பாஜக சார்பாக 5 தொகுதிகளில் அக்கட்சியின் சிட்டிங் எம்.பி.க்களே நிறுத்தப்பட்டனர். வடமேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே, நாட்டுப்புற பாடகர் ஹன்ராஜ் ஹான்ஸ் மற்றும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை பாஜக நிறுத்தியது. இந்த இரண்டு வேட்பாளர்களுமே ஏற்கனவே இருந்த எம்.பி.க்களை விட வலிமையானவர்கள்.
கூட்டணி குழப்பத்தில் இருக்கும் கமல்ஹாசன்: இப்போ என்ன ப்ளான்?
அன்னா ஹசாரே இயக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்தது. அப்போது, ஜேஎன்யு பேராசிரியர் ஆனந்த் குமார், பத்திரிகையாளர் அசுதோஷ், சமூக ஆர்வலர் மற்றும் அறிஞர் ராஜ்மோகன் காந்தி உட்பட பரீட்சயமான வலிமையான வேட்பாளர்களை ஆம் ஆத்மி நிறுத்தியது. ஆனால், 2019ஆம் ஆண்டுக்குள் இவர்கள் அனைவரும் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி விட்டனர். இது, பலமான வேட்பாளர்களை டெல்லி ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியால் நிறுத்த முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்த கடந்த கால வரலாறுகளுடன், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து 2024 தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், தொகுதி பங்கீடு விகிதம் என்னவாக இருக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான், முன்னாள் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஜே.பி. அகர்வால், முன்னாள் டெல்லி அமைச்சர் அர்விந்தர் சிங் லவ்லி மற்றும் முன்னாள் எம்.பி சந்தீப் தீட்சித் ஆகிய 4 பேர் இந்த முறையும் போட்டியிட தயாராக உள்ளனர். இதில், சந்தீப் தீட்சித்தின் மறைந்த தாயார் ஷீலா தீட்சித் 2019இல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர்.
2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பான போட்டியிட்ட ஐந்தாவது நபரான முன்னாள் எம்பி மகாபல் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து விட்டார். ஒருவேளை, சீனியாரிட்டி அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்களை ஆம் ஆத்மி ஒப்புக்கொண்டால், தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி களமிறங்க வாய்ப்புள்ளது. 2019 தேர்தலில், தெற்கு மற்றும் வடமேற்கு டெல்லியில், ஆம் ஆத்மி இரண்டாவது இடத்தை பிடித்தது. மேற்கு டெல்லியில் அப்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மகாபல் மிஸ்ரா இரண்டாவது இடத்தை பிடித்தார். அவர் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் உள்ளார். அவரது மகன் துவாரகா சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
அதேசமயம், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமான ராகவ் சத்தா, 2024 மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் நிலைமை சிக்கலாக வாய்ப்புள்ளது.
ஆம் ஆத்மியின் பிரச்சினைகள் இத்துடன் முடிவடையவில்லை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் தேர்தல் பிரசாரத்தின்போது அக்கட்சிக்கு சவாலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், கெஜ்ரிவால் பற்றி அனைவரும் அறிந்ததே. கூட்டணி அடிப்படையில் டெல்லியில் மூத்த கட்சியான காங்கிரஸுக்கு அவர் பெரிதாக விட்டுக் கொடுக்க மாட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் காங்கிரஸ் இறங்கி செல்ல வேண்டியதிருக்கும் என்கிறார்கள்.