ஸ்வீட் கடைகளில் சில்லறையில் விற்கப்படும் இனிப்புகளின் அந்த ஸ்வீட்டுகள் எப்போது தயாரிக்கப்பட்டு, எந்ததேதிவரை சாப்பிட உகந்தது, கலாவதி தேதி என்ன போன்றவற்றை ஜூன் 1-ம் தேதிமுதல் குறிப்பிட வேண்டும் எனஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.நீண்ட நாட்களுக்கு முந்தைய மற்றும் காலாவதியான இனிப்புகளை விற்பனை செய்வது குறித்து அதிகளவில் புகார்கள் வரத்தொடங்கின. இதையயடுத்து எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிமுறைகள், 2011 இன் படி, பெட்டிகளில் அடைக்கப்பட்ட இனிப்புகளுக்கு இந்த விதிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கும் இந்த விதிமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.இனிப்புகளின் தயாரிப்புத் தன்மை மற்றும் நிலைமைகளைப் பொறுத்து காலாவதி தேதியை தீர்மானிக்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில்லரை இனிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் சிலர் இந்த நடைமுறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பால் கொண்டு தயாரிக்கப்படும் ரசகுல்லா, பாதாம் பால், ரசமலாய், ராஜ்பாக் போன்ற இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குள் சாப்பிட வேண்டும். காலாவதியானால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு வழிகாட்டுதல் குறிப்பு ஒன்றை எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.