Asianet News TamilAsianet News Tamil

மகாராஷ்டிர துணை முதல்வராக பொறுப்பேற்றார் அஜித் பவார் - சரத் பவாருக்கே தெரியாமல் நடந்த விஷயம்!

மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித்  பவார் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Ajith pawar took oath as Maharashtra Deputy Chief Minister sharad pawar un aware
Author
First Published Jul 2, 2023, 3:10 PM IST

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து, அம்மாநில துணை முதல்வராகவும் அவர் பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், அஜித்  பவாருக்கு ஆளுநர் ரமேஷ் பைஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கும் நிலையில், இரண்டாவது துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக அஜித் பவார் விருப்பம் தெரிவித்த நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்த அவர், அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.

ராஜ்பவனில் நடந்த விழாவில் அஜித் பவாருடன் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உட்பட தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அஜித் பவாரையும் சேர்த்து மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் அவர் தலைமையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

முன்னதாக, மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அஜித் பவார் சில கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். ரகசியமாக நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து என்சிபி தலைவர் சரத் பவார் அறிந்திருக்கவில்லை. “இந்தக் கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், எம்எல்ஏக்கள் கூட்டத்தை அழைக்க அவருக்கு (அஜித் பவாருக்கு) உரிமை உள்ளது. அவர் அதை வழக்கமாக செய்கிறார். இந்த சந்திப்பு பற்றி அதிக விவரங்கள் எனக்கு தெரியாது.” என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.

உடைந்தது தேசியவாத காங்கிரஸ்! சரத் பவாருக்கு துரோகம் செய்து துணை முதல்வராகும் அஜித் பவார்!

அஜித் பவாரின் இந்த நடவடிக்கையால் பாஜகவை போலவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்துள்ளது. சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும்,  சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித் பவாருக்கும் இடையே கட்சியை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸின் 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரை பிரித்துக் கொண்டு அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சரத் பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் தலையீட்டால், அந்த பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 30 பேருடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்து, துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இதில் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் நாட்டின் மூத்த அரசியல்வாதியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னின்று செயல்பட்டு வரும் நிலையில், அவரது கட்சியிலேயே பிளவு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக - சிவசேன ஆகிய கட்சிகள் இடையே ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டபோது, சரத் பவார் தலையீட்டின் பேரில், எதிரெதிர் துருவங்களான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து  மகா விகாஸ் அகாடி எனும் கூட்டணியை அமைத்தார்.

இதனிடையே, உட்கட்சி பிரச்சினை காரணமாக சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வரானார். சிவசேனா கட்சியும் அவர் வசம் சென்றுள்ளது. தற்போது உத்தவ் தாக்கரே அணியினர் (சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி - UBT)  என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios