உடைந்தது தேசியவாத காங்கிரஸ்! சரத் பவாருக்கு துரோகம் செய்து துணை முதல்வராகும் அஜித் பவார்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், 17 எம்எல்ஏக்கள் ஆதரவுடன், மகாராஷ்டிர அரசில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
17 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர அரசில் துணை முதல்வராக பதவியேற்கிறார். மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக அஜித் பவார் விருப்பம் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா ராஜ்பவனில் விரைவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அஜித் பவார் சில கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். என்சிபி தலைவர் சரத் பவாருக்கு தெரியாமல் இந்தச் சந்திப்பு ரகசியமாக நடந்திருக்கிறது.
தேவகிரியில் உள்ள அஜித் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்சிபி மூத்த தலைவர் சகன் புஜ்பால் மற்றும் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் மாநில கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் கலந்துகொள்ளவில்லை.
இலவசங்களை மீண்டும் விமர்சித்த பிரதமர் மோடி!
கட்சி உடைந்தது ஏன்?
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டாம், கட்சிப் பதவியே வேண்டும் என்று அஜித் பவார் கூறிய நிலையில், கட்சியின் செயல் தலைவர் பதவி சுப்ரியா சுலேவுக்கு பதவிக்கு வழங்கப்பட்டது. இதனால், அஜித் பவாருக்கும் சுப்ரியா சுலேவுக்கு இடையே முரண்பாடு வளர்ந்து வந்தது. இந்தப் பின்னணியில் தான் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, பாஜக கூட்டணியுடன் இணைந்துள்ளார்.
கட்சி பிளவுபட்டதை அறிந்த தேசிவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று தான் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வந்தவரும் மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தனது மகளுக்கு முக்கியத்துவம் அளித்ததே என்சிபி உடைய காரணமாக அமைந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சரத் பவார் வாரிசு அரசியலைப் பின்பற்றி, தன் மகள் சுப்ரியாவை அடுத்த தலைவராக்கும் நோக்கில் செயல்பட்டதே கட்சி உடைய வித்திட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவு:
2024 பொதுத்தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று சரத் பவார் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதற்கு அடுத்த சில நாட்களுக்கு அவரது கட்சியைச் சேர்ந்த பல எம்எல்ஏக்களே கட்சியில் இருந்து விலகியுள்ளது அவரது கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முயற்சிக்கும் பின்னடைவாக மாறியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஏற்பட்டுள்ள எதிர்பாராத பிளவு மகாராஷ்டிர அரசியலின் அடுத்த நகர்வுகளிலும் முக்கியான தாக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. அந்த மாநிலத்தில் பாஜகவை எதிர்த்த சிவசேனா கட்சி முதலில் உத்தவ் தாக்கரே அணி - ஷிண்டே அணி என பிளவுபட்டது. முதல்வர் ஷிண்டே தலைமையிலான அணி வில் அம்பு சின்னத்தைக் கைப்பற்றி, கட்சியையும் வசப்படுத்தியது. இப்போது, அஜித் பவார் அணி என்சிபியிலும் இரண்டு அணிகளை உருவாக்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, கருத்தியல் ரீதியில் முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தரவ் தாக்கரே 2019 முதல் 2022 வரை முதல்வராக இருந்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்றதால், மூன்று கட்சி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. தற்போதைய முதல்வர் ஷிண்டே பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.
From The India Gate: காம்ரேட்களை அலறவிடும் ஆபரேஷன் சக்தியும் கட்சிக்கு அடங்காத தலைவரும்!