விமானத்தில் 5 மணி நேரம் எந்த உணவும் சாப்பிடாத பயணி; அயன் பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்
சவுதியில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 5 மணி நேரம் எந்த உணவும் சாப்பிடாமல் வந்த பயணியிடம் இருந்து ரூ.69 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. அதில் பயணம் செய்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் பிற பயணிகளின் நடவடிக்கையில் இருந்து சற்று மாறுபட்டு இருந்துள்ளது. முன்னாக இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு வழக்கம் போல் உணவு வழங்கி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட நபர் மட்டும் உணவை வாங்க மறுத்துள்ளார்.
உணவு மட்டுமல்லாது குடிநீர், குளிபானம் என எந்தவொரு உணவுப் பொருளையும் அந்த பயணி வாங்க மறுத்ததால் விமான பணிப்பெண்களுக்கு சந்தேகம் எழுந்தது. சுமார் 5.30 மணி நேரப் பயணத்தில் பயணி எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாததால் இது தொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர். விமானி உடனடியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
Udhayanidhi Stalin: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? உதயநிதிக்கு பிரமோஷன்
அதன் அடிப்படையில் அதிகாரிகள் குறிப்பிட்ட நபரை சோதனை செய்தனர். அப்போது அவர் முட்டை வடிவில் தங்கத்தை வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1.1 கிலோ எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.69 லட்சம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.