லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிதறியதில் 242 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் தாய்லாந்தில் இருந்து டெல்லி சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

Air India Flight Bomb Threat: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் AI171 நேற்று மதியம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே அதிஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஏர் இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அவரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

அதாவது தாய்லாந்தில் புக்கெட் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் 153 பயணிகள் இன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விமானிக்கு ஒரு அவசர தகவல் அளிக்கப்பட்டது. அதில், விமானத்தை உடனடியாக தரை இறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

இதனையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பயணிகள் அனைவரும் வெளியேற்றிய பிறகு வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்காததால் புரளி என்பது தெரியவந்தது. விமானத்தின் கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து 153 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.