தீப்பிடித்த இன்ஜின்: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
பெங்களூரில் இருந்து கொச்சின் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் அவசர அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது
பெங்களூரில் இருந்து கொச்சிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததையடுத்து, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறக்கப்பட்டதும், அதிலிருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தீப்பிடித்தது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, விமான ஊழியர்கள் உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை எச்சரித்து, முழு அளவிலான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
“பெங்களூரில் இருந்து கொச்சிக்கு மே 18ஆம் தேதி இரவு 11.12 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்பிரஸ் IX 1132 விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.” என விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முழு அளவிலான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. அதில் பயணித்த 179 பயணிகள் மற்றும் பணியாளர்கள் 6 பேர் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வலது எஞ்சினில் இருந்து தீப்பிடித்ததாக சந்தேகிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவை பகலாக்கிய விண்கல்: வைரல் வீடியோ!
முன்னதாக, டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 175 பயணிகளுடன் நேற்று முன் தினம் மாலையில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் தீப்பிடித்ததால் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.