176 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல் சென்னை உள்பட 5 விமான நிலையங்களுக்கும் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் காரில் குண்டு வெடித்து 12 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையிலிருந்து வாரணாசிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கொண்டிருந்தது.

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

அப்போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 176 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அங்கு தயாராக இருந்த வெடிகுண்டு செயலிழப்புப் படையினரும் பாதுகாப்புப் படையினரும் விமானத்தை தீவிரமாக சோதனை செய்தனர்.

5 விமான நிலையங்களுக்கு மிரட்டல்

இருப்பினும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் காணப்படவில்லை. ஆகவே அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதன்பின்பே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதேபோல் இண்டிகோ விமான நிறுவத்தின் குறைதீர்க்கும் மையத்தில் வந்த மின்னஞ்சலில் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 5 முக்கிய விமான நிலையங்களுக்கும் மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது.

தீவிர பாதுகாப்பு சோதனை

இதனைத் தொடர்ந்து சென்னை உள்பட 5 விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பிற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து, விமானங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டன, மேலும் விமானத்தின் ஒவ்வொரு சாமான்களும் உட்புறமும் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டன.