- Home
- இந்தியா
- ஏர் இந்தியா விமான விபத்து: விமானியை யாரும் குற்றம் சொல்ல முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி!
ஏர் இந்தியா விமான விபத்து: விமானியை யாரும் குற்றம் சொல்ல முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி!
Air India crash: 260 உயிர்களை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் விமானியை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

ஏர் இந்தியா விமான விபத்து
கடந்த ஜூன் மாதம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிச்சென்ற முதன்மை விமானி சுமீத் சபர்வாலும் உயிரிழந்தார்.
உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில், வெளிப்படையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சரியான விசாரணை நடைபெற வேண்டும் என்று விமானி சுமீத் சபர்வால் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை சரியாக நடைபெறவில்லை
இந்த மனு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்ஜி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், விமான விபத்து விசாரணை பணியகம் (AAIB) நடத்தும் தற்போதைய விசாரணை சுதந்திரமாக இல்லை என்று தெரிவித்தார். மேலும் விபத்துக்கு விமானி நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.
விமானியை யாரும் குறை சொல்ல முடியாது
இதனைத் தொடர்ந்து நீதிபதி சூர்யா காந்த், ''இந்த விபத்து நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் உங்கள் மகன் மீது பழி சுமத்தப்படுகிறது என்ற சுமையை நீங்கள் (தந்தை) சுமக்க வேண்டாம். அவரை (விமானியை) யாரும் எதற்கும் குறை சொல்ல முடியாது," என்று நீதிபதி காந்த் கூறினார். மேலும் ஆரம்பகட்ட AAIB அறிக்கையில் விமானிக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்று நீதிபதி பாக்ஜியும் கூறினார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை
"ஒரு விமானி மற்றவரிடம் எரிபொருள் நிறுத்தப்பட்டதா என்று கேட்டார், மற்றவர் இல்லை என்றார். அந்த அறிக்கையில் விமானியிடம் தவறு நடந்ததாக எந்த இடத்திலும் குறைப்பிடப்படவில்லை" என்று நீதிபதி கூறினார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த விசாரணையின் அடிப்படையில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, விமானி பிழையை சுட்டிக்காட்டியதாக மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.
மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
அதற்கு நீதிபதிகள், ''வெளிநாட்டு அறிக்கைகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை" என்று தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த மனு மீது உரிய பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் டிஜிசிஏக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.