ஏர் இந்தியா விபத்து: தவறான உடல் வழங்கப்பட்டதால் இறுதிச்சடங்குகள் ரத்து
சமீபத்திய ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தவறான உடல்கள் வழங்கப்பட்டதால் இறுதிச் சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.

ஏர் இந்தியா விமான விபத்து
சமீபத்தில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு, தங்கள் உறவினரின் உடலுக்குப் பதிலாக தவறான உடல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் இறுதிச் சடங்குகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
விபத்தில் உயிரிழந்த 261 பேரில், 52 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உடல் பாகங்கள் கடுமையான வெப்பத்தால் கருகி, சிதைந்து போனதால் உடல்களை அடையாளம் காண்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்களில் அடையாளக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிச்சடங்கில் குழப்பம்
'டெய்லி மெயில்' நாளிதழின் அறிக்கையின்படி, ஒரு குடும்பம் தங்கள் உறவினரின் சடலத்தைப் பெற்று, இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆனால், சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அது தங்கள் உறவினரின் உடல் அல்ல, அடையாளம் தெரியாத இன்னொரு பயணியின் உடல் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அந்த குடும்பம் இறுதிச் சடங்குகளை ரத்து செய்ய நேரிட்டது.
மற்றொரு குடும்பத்திற்கு, பலரின் உடல் பாகங்கள் ஒன்றாகக் கலக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளது. லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்களின் அடையாளத்தைச் சரிபார்த்தபோதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்திய அரசின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த தொழில் நேர்த்தியுடனும், கண்ணியத்துடனும் கையாளப்பட்டன. அடையாளம் காண்பதற்கான அனைத்து நெறிமுறைகளையும், தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்தி செய்தே உடல்கள் ஒப்படைக்கப்பட்டன" என்று விளக்கமளித்துள்ளது. இருப்பினும், பிரிட்டன் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்குப் பிறகு, குஜராத் மாநில தடயவியல் அறிவியல் இயக்குநரகம் மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், உடல்களை அடையாளம் காணவும், டிஎன்ஏ மாதிரிகளைப் பொருத்திப் பார்க்கவும் கடுமையாக உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த அடையாளக் குழப்பங்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.