டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து குதித்து இளம் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 8,20,916ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 22,123ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமான பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் தமிழ்நாடும், 3வது இடத்தில் டெல்லியும் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இதனால்,  மருத்துவர்கள் மன அழுத்தத்துடன் பணி புரிந்து வருவதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் அனுராக்குமார் (25). இளம் வயது மருத்துவரான இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கிஇருந்து வருகிறார். மொத்தம் 18 மாடிகொண்ட விடுதியில் குமார் 10வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவலல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்பட்ட விசாரணையில் வேலை பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

கடந்த 6ம் தேதி பத்திரிகையாளர் ஒருவர் மருத்துவமனையின் 4வது மாடியில்இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வார காலத்திற்குள் 2வது சம்பவமாக மருத்துவர் தற்கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.