பயோடெக்னாலஜி வளர்ச்சிக்கு இது சிறந்த காலம்.. டெல்லியில் நடக்கும் உச்சிமாநாட்டு - பங்கேற்ற கிரண் மஜும்தார் ஷா!
Global Technology Summit : டெல்லியில் நேற்று, இன்று மற்றும் நாளை ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பல துறை தலைவர்களும் பங்கேற்று பேசி வருகின்றனர்.
டெல்லியில் நடந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று துவங்கி வைத்து பேசினார். மேலும் இன்று டிசம்பர் 5ம் தேதி காணொளி காட்சி மூலமாக மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் பேசிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்குமார் சிங் அவர்கள், தொழில்நுட்பத்தின் அவசியத்தை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா அவர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பயோகான் என்பது பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். இந்திய அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கிரண் அவர்கள், தற்பொழுது நிலவிவரும் இந்த காலகட்டமானது பயோ டெக்னாலஜி துறைக்கு ஒரு அற்புதமான காலமாக திகழ்ந்து வருகிறது என்று கூறினார். மேலும் தகவல் தொழில்நுட்பமும் அதற்கு பெரிய அளவில் உதவி வருவதாகவும் அவர் கூறினார். இந்த இரு தொழில்நுட்பங்களும் பயோடெக்னாலஜி துறையில் "முன்கணிப்பு முறைகளை" அறிமுகப்படுத்த பெரிய அளவில் உதவும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பல இளைஞர்களை இந்த துறையில் கவனம் செலுத்த நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். பெங்களூருவில் பிறந்து அங்கேயே தனது பட்டப் படிப்புகளை முடித்த கிரண் தற்பொழுது இந்தியாவின் கோடீஸ்வர பெண்களில் ஒருவராவார். பயோடெக்னாலஜி துறையில் பல சாதனைகளை இவருடைய நிறுவனம் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது இவருடைய சொத்து மதிப்பு சுமார் 230 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.