விரைவில் நடைமுறைக்கு வரும் சிஏஏ சட்டம்.. அமித்ஷாவின் கார் நம்பர் பிளேட் போட்டோ வைரல்.. இதை கவனிச்சீங்களா?
சிஏஏ சட்டம் எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கார் பிளேட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதற்கு முன்னதாகவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மார்ச் 2-வது வாரத்தில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் அதற்கு முன்னதாகவே சிஏஏ சட்டத்தின் விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமித்ஷா 'DL1CAA 4421' என்ற நம்பர் பிளேட் கொண்ட காரில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்வதை பார்க்க முடிகிறது.
"CAA க்கான விதிமுறைகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன் CAA விதிகள் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் அமித்ஷா கூறியிருந்தார். அப்போது "சிஏஏ என்பது நாட்டின் சட்டம், அதன் அறிவிப்பு கண்டிப்பாக வெளியிடப்படும். தேர்தலுக்கு முன்பே அந்த அறிவிப்பு வெளியிடப்படும். தேர்தலுக்கு முன்பு சிஏஏ அமல்படுத்தப்படும். அதைப் பற்றி யாரும் குழப்பம் அடைய வேண்டாம்" என்று அவர் கூறியிருந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய எதிர்ப்புகள் எழுந்தன, மதத்தின் அடிப்படையில் இது பாரபட்சமானது என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.