புல்வாமா தாக்குதலில் இருந்து இன்னும் மீண்டும் வராத நிலையில், மற்றொரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடி பொருட்கள் நிரப்பிய காரை மோத செய்து தற்கொலை படைத்தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த கொடூர தாக்குதலுக்கு நாடே கொந்தளிப்புடன் காணப்பட்டது. 

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பிறகு பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் சிலர், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைமையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த உரையாடல்களை ஒட்டுக் கேட்ட உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதில் புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்துவிட்டதால், அடுத்தக்கட்ட தாக்குதல் இதைவிட மிகப்பெரிய அளவிலான தாக்குதலாக இருக்க வேண்டும். அதிகளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுமா அல்லது வேறு ஒரு முக்கிய நகரில் நடைபெறுமா என்பது குறித்த தகவல் இல்லை. கடந்த ஆண்டே 21 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு படையினர் முழு விழிப்புணர்வுடன் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.