24 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரோவை உளவு பார்த்ததாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1994-ம் ஆண்டு இஸ்ரோ ஆய்வு மையத்தை விஞ்ஞானி நம்பி நாராயண் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் கேரள போலீஸார் அவரை கைது செய்தனர். இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் அறிக்கையி்ல் நம்பி நாராயணனை கைது செய்தது தேவையில்லை, அவசியமில்லாதது என்று அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந் 1994-ம் ஆண்டு இஸ்ரோ ஆய்வு மையத்தை உளவு பார்த்த குற்றசாட்டில் விஞ்ஞானி நம்பி நாராயண் உள்ளிட்ட 6 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுஸியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த ரகசியங்களை விற்பனை செய்ததாக, 1994 நவம்பர் 30-ம் தேதி, கேரளா போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ நடத்திய விசாரணையில், இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்ததால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். 

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அனைவரையும் விடுவித்தது. உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவிலும் நம்பி நாராயண் உள்ளிட்ட 6 பேரை விடுவித்து கடந்த 1998-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

ஆனால், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி கைது செய்த கேரள ஏடிஜிபி சிபி மாத்யூ, கே.கே.ஜோஷ்வா, எஸ் விஜயன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்பி நாராயணன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவையில்லை என்று தீர்ப்பளித்து.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந் 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் வழக்குத் தொடர்ந்து அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார், மேலும் கடந்த 2001-ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் அளித்த தீர்ப்பில்  ரூ.10 லட்சம் என்ற இழப்பீ்டு தொகையையும் அதிகப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையில் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அந்த குழுவின் அறிக்கையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் தேவையின்றி கைது செய்யப்பட்டுள்ளார், அவரின் கைது நடவடிக்கை தேவையற்றது என்று தெரிவித்திருந்தது. அவருக்கான இழப்பீட்டு தொகையையும் அதிகப்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில், பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளான விஞ்ஞானி நம்பி நாரயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவரை கைது செய்த கேரள போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது.