பிஷப் முல்லிக்கல் மீது பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை மிஷினரிஸ் ஆப் ஜீசஸ் சபை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜீசஸ் சபை மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில், கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ மூலக்கல், கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரை, பலமுறை பிஷப் பிராங்கோ, தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி போலீசில் புகார் அளித்திருந்தார். 

புகார் அளிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையிலும் பிஷப் பிராங்கோ மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் 5 பேர், போராட்டம் நடத்தினர். கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிஷப் பிராங்கோ மூலக்கல், வரும் 19 ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு, போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிஷப் பிராங்கோ மீதான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து  விசாரணைக்கு ஏதுவாக பிஷப் முலக்கல், தேவாலய நிர்வாக பொறுப்புகளில் இருந்து பதவி விலகியுள்ளார். 

இந்த நிலையில், மிஷினரிஸ் ஆப் ஜீசஸ் சபை, பிஷப் முல்லிக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், கன்னியாஸ்திரி 9 பேருடன் இணைந்து பிஷப் முல்லிக்கல்லுக்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் ஜீசஸ் சபை தெரிவித்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் புகார் கூறியவர்களின் படத்தை வெளியிடக் கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், அதனை மீறி, மிஷினரிஸ் ஆப் ஜீசஸ் சபை, கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஜீசஸ் சபை மீது கேரள போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. 

பிஷப் பிராங்கோவுடன், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்தை ஜீசஸ் சபை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் இருவரும் சகஜமாக இருப்பது போன்று உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றுள்ளதாகவும், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருந்தால் இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று ஜீசஸ் சபை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படும் வெளியிடப்பட்டது விதிமுறை மீறல் என்பதால், கேரள போலீஸ், ஜீசஸ் சபையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.