ஆசிய பாராலிம்பிக்கில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று தந்த ஆதித்ய மேத்தாவுக்கு பெங்களூரு விமான நிலைய பாதுகாப்பு சோதனை அதிகாரிகளால் மிகப்பெரிய சங்கடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆசிய பாரா சைக்கிள்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றவர் ஆதித்யா மேத்தா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள கெம்பெகவுடா விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஐதராபாத் செல்வதற்காக வந்த அவரை பாதுகாப்பு சோதனை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

மாற்றுத்திறனாளியான ஆதித்யா மேத்தா அணிந்திருந்த செயற்கைகாலை கழற்றி காண்பிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஆதித்ய மேத்தா, செயற்கைகாலை கழற்றி மீண்டும் மாற்றுவதால் ஏற்படும் வலி குறித்து அதிகாரிகளிடம் அவர் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும், அவர்கள் செயற்கை காலை கழற்றி காண்பிக்கும்படி பிடிவாதமாக இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆதித்ய மேத்தா தெரிவிக்கையில்:- 

விமான நிலையத்தில் சோதனையின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் காயங்கள் இருப்பதைக் காண்பித்தும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதை பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. செயற்கைக் காலை ஒருமுறை கழற்றி அணிய சுமார் 45 நிமிடங்கள் வரை தேவைப்படும்.

ஆனால், என் செயற்கைக் காலை நிதானமாக அணியக்கூட அவர்கள் எனக்கு அவகாசம் தரவில்லை. அவற்றை விரைவாக அணியுமாறு என்னை வற்புறுத்தினர். 

இதன் காரணமாக என் காலில் அடிபட்டு ரத்தம் வந்தது. இதே போன்ற சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் எனக்கு ஏற்பட்டது. கடந்த முறை நான் யாரிடம் புகார் கூறினேனோ, அந்த அதிகாரியே இந்த முறை சோதனை அறைக்கு செல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார். என் காலில் உள்ள பிரச்சனையைப் பற்றி கூறியதற்கு, அது உங்கள் பிரச்சினை என்று அந்த அதிகாரி அலட்சியமாக கூறினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆதித்ய மேத்தாவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும்கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.