ஆதித்யா எல்1 கவுண்ட் டவுன் நாளை தொடங்குகிறது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!

ஆதித்யா எல்1 கவுண்ட் டவுன் நாளை தொடங்கவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்

Aditya L1 Mission countdown starts Tomorrow says isro chairman somnath

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. நிலவில் இருந்து பல்வேறு தகவல்களை பிரக்யான் ரோவர் அனுப்பி வருகிறது. இதன் மூலம் நிலவின் பரப்பில் தடம் பதித்த நான்காவது நாடாக மாறியுள்ள இந்தியா, தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ரூ.424 கோடி மதிப்பிலான ஆதித்யா எல்1 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பவுள்ளது. பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், இந்த செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே Lagrange point எனப்படும் ஐந்து புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலவும் சமநிலை காரணமாக, இங்கு வைக்கப்படும் பொருள் சூரியனால் ஈர்க்கப்படாது. அந்த புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்களுக்கு சூரியனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதன்படி, லேக்ரேஞ் புள்ளி 1 (எல்1)-இல், இஸ்ரோவின் ஆதித்யா எல்1 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதன் மூலம், சூரியனின் மேற்பரப்பில் உள்ள பல்வேறு நிகழ்வுகளைக் கவனிப்பது எளிதாக இருக்கும் என தெரிவித்துள்ள இஸ்ரோ, சூரியன்-பூமி அமைப்பின் லேக்ரேஞ் புள்ளியை (L1) சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்1 வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல்1 முக்கிய ஆய்வுக் கருவியை வடிவமைத்தது யார்? இதுதான் ரொம்ப முக்கியம்? இஸ்ரோ விளக்கம்

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லேக்ரேஞ் புள்ளியை (L1) ஆதித்யா எல்1 செயற்கைகோள் அடைய 125 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வின்கலத்தில், இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி (Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ-ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ (Plasma Analyser Package for Aditya), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள், வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் (Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் (High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புல தன்மையை அளவிடும் மேக்னோமீட்டர் ஆகிய 7 பேலோடுகள் அனுப்பப்படவுள்ளன. இதில் 4 பேலோடுகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். 3 பேலோடுகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆதித்யா எல்1 கவுண்ட் டவுன் நாளை தொடங்கவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆதித்யா எல்1 செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்த தயாராகி வருகிறோம். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாராக உள்ளன. இதற்கான ஒத்திகை ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆதித்யா எல்1 செயற்கைகோளுக்கான கவுண்ட் டவுன் செப்டம்பர் 1ஆம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி (நாளை மறுநாள்) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.” என்றார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஆதித்யா எல்1 விண்ணில் ஏவப்படவுள்ளது. இதனை  பொதுமக்கள் நேரில் பார்க்கவும் இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios