பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சிறைக் கைதிகளின் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் முகாம் நடத்தி ஆதார் இல்லாத நபர்களுக்கும் வழங்கப்பட்டும், ஏற்கனவே இருந்தால், அவர்களின் ஆதார் எண்ணும் பெறப்பட்டு வருகிறது.

இதற்கான நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் பேகூர் சிறையில் நேற்று இதை தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் கூறுகையில், “ பேகூர் சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை வழங்கியுள்ளனர். மேலும், ஆதார் இல்லாத மற்ற 500 பேருக்கு ஆதார் எண் வழங்க இந்த முகாம் பயன்படும். இந்த இலக்கு அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற சிறைகளுக்கும் விரிவு படுத்தப்படும். ஆதார் மூலம், ஒரு குற்றவாளியின் அடையாளத்தை தெரிந்து கொண்டு, முந்தைய காலத்தில் செய்த குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை போலீசார் எளிதாக கண்டுபிடிக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.