சூப்பர் செய்தி.. ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்கும் அதானி & சேவாக்
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை பிரபல தொழிலதிபர் அதானி மற்றும் கிரிக்கெட் வீரர் சேவாக் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சரி செய்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்தார். சம்பவ இடத்திற்கு 2ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ள அவரை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, சீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், இனி எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணமும், பிரதமர் நிவாரண நிதியில் ரூ. 2 லட்சம் நிவாரணும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி
அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நிவாரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகளை அதானி குழுமம் ஏற்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதானி குழும தலைவர் கௌதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்து உள்ளது.
இந்த விபத்து செய்தி தன்னை மனதளவில் ஆழமாக பாதித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையை வழங்க வேண்டியது மற்றும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் சிறக்க செய்ய வேண்டியதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பு" என்று கூறியுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க சேவாக் ஏற்பாடு செய்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு தனது சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இலவசக் கல்வியை வழங்க உள்ளதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்