வடகிழக்கு டெல்லி நடந்த கலவரத்தில் உளவுத்துறை துறை ஊழியர் அங்கித் சர்மாவைக் கொலை செய்த குழுவை வழிநடத்தியதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீதான விசாரணை நிறைவடையும் வரை அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக ஆம் ஆத்மி அறிவித்தது.  வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் சந்த் பாக் பகுதியில் உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா, மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலையில் அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலர்  தாஹிர் உசேனுக்கு பங்கு இருப்பதாக அங்கித் ஷர்மாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தாஹிர் உசேன் கூறுகையில் “என்னைப் பற்றி வெளிவரும் செய்திகள் தவறானவை. கபில் மிஸ்ராவின் வெறுப்புப் பேச்சுக்குப் பின்னரே, டெல்லியில் நிலைமை மோசமடைந்தது. வன்முறையால் எனது வீடும் பாதிக்கப்பட்டது. எனக்கு பாதுகாப்பு வழங்க போலிஸிடம் கேட்டும் வழங்கவில்லை.. நான் அமைதியை கடைப்பிடிக்கும் ஓர் இந்திய முஸ்லிம்.. என்னை நம்புங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே தாஹிர் உசேன் மீதான விசாரணை முடியும் வரை அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது