இந்திய ரயில்வே வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்

நாடு முழுவதும் 1309 நிலையங்களை மறுசீரமைக்க அமிர்த பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி (இன்று) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நாடு முழுவதும் அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘வளர்ச்சி அடையும் இலக்கை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அமிர்த காலத்தின் தொடக்கத்தில் உள்ள நாம், புதிய ஆற்றல், புதிய உத்வேகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உணர்வில், இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது.” என தெரிவித்தார்.

Scroll to load tweet…

“இந்தியாவில் உள்ள 1300 முக்கிய ரயில் நிலையங்கள் நவீன முறையில் அமிர்த பாரத் ரயில் நிலையமாக உருவாக்கப்படவுள்ளன. இதில், 508 அமிர்த பாரத் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி இன்று தொடங்குகிறது. இந்த 508 அமிர்த பாரத் நிலையங்களின் மறு மேம்பாட்டிற்காக சுமார் 25,000 கோடி செலவிடப்படவுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பு மிக முக்கியமாக நம் நாட்டின் சாமானிய மக்களுக்கு பெரிய உந்துதலாக இருக்கும்.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்று, ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இன்று இந்தியா மீது திரும்பியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியா மீதான உலகின் அணுகுமுறை மாறிவிட்டதாக கூறினார். இதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், “1) கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பெரும்பான்மை அரசாங்கத்தை இந்தியர்கள் கொண்டு வந்தனர், 2) முழு பெரும்பான்மை அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுத்தது மற்றும் சவால்களுக்கு எதிராக நிரந்தர தீர்வுக்காக தொடர்ந்து உழைத்தது.” என தெரிவித்தார்.

Scroll to load tweet…

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் எதிர்க்கட்சியின் ஒரு பிரிவு இன்றும் பழைய வழிகளைப் பின்பற்றுகிறது. அவர்கள் சுயமாக எதையும் செய்ய மாட்டார்கள், வேறு யாரையும் எதுவும் செய்ய விட மாட்டார்கள். நாடு ஒரு நவீன பாராளுமன்ற கட்டிடத்தை கட்டியது. நாட்டின் ஜனநாயகத்தின் சின்னம் நாடாளுமன்றம். இதற்கு ஆளும் தரப்பிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால், புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு, எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் கர்தவ்யா பாதையை மீண்டும் உருவாக்கினோம் ஆனால் அவர்கள் அதையும் எதிர்த்தனர். 70 ஆண்டுகளாக, அவர்கள் நாட்டின் துணிச்சலான இதயங்களுக்கு ஒரு போர் நினைவுச்சின்னம் கூட கட்டவில்லை. நாங்கள் தேசிய போர் நினைவகத்தை கட்டியபோது, எந்த வெட்கமும் இல்லாமல் அதை பகிரங்கமாக விமர்சித்தனர்.” என கடுமையான சாடினார்.

“சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைதான் உலகிலேயே மிக உயரமான கட்டிடம். ஒவ்வொரு இந்தியனும் அதில் பெருமை கொள்கிறான். ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்கள் யாரும் சிலையை பார்வையிட்டதில்லை. எதிர்மறை அரசியலுக்கு அப்பால் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, நேர்மறை அரசியலின் பாதையில் நாங்கள் முன்னேறி வருகிறோம்.” என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறாரா? காங்கிரஸ் கேள்வி!

ஆகஸ்ட் 7ஆம் தேதியான நாளை, சுதேசி இயக்கத்திற்காக அர்ப்பணித்து தேசிய கைத்தறி தினத்தை நாடு கொண்டாடுகிறது. அது, 'உள்ளூர் மக்களுக்கான குரல்' என்ற தீர்மானத்தை நினைவுபடுத்தும் நாளாகும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும், “நவீன ரயில் நிலையங்கள் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். ரயில்வே பயணத்தை அணுகக்கூடியதாக மட்டுமல்லாமல், சுவாரஸ்யமாகவும் மாற்றுவதே அரசின் குறிக்கோள். ஒவ்வொரு 'அமிர்த பாரத் நிலையமும்' நகரத்தின் நவீன அபிலாஷைகள், பண்டைய பாரம்பரியத்தின் சின்னமாக மாறும்.” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13, பஞ்சாபில் 22 ரயில் நிலையங்கள் என நாடு முழுவதும் மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.