பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
'மோடி’ குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கில், சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அடுத்த நாளான மார்ச் 24ஆம் தேதி ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த அம்மாநில உயர் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..
அதன் தொடர்ச்சியாக, குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த் உச்ச நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து நேற்று முன் தினம் உத்தரவிட்டது. இதன் மூலம், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி., ஆக பதவியில் அமர முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், இதுவரை அதன் மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சூரத் நீதிமன்ற தீர்ப்பு வந்த 26 மணி நேரத்துக்குள்ளாக ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். ஆனால், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து 26 மணி நேரம் கடந்தும் அவரது தகுதி நீக்கத்தை ஏன் இன்னும் திரும்பப் பெறாமல் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்பதால் பிரதமர் மோடி பயப்படுகிறாரா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
“ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதே வேகம் அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதிலும் காட்டப்பட வேண்டும்.” என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து இரண்டு முறை இதுதொடர்பாக பேசியுள்ளேன். செயலரிடம் பேசி ஆவணங்களை அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி என்னிடம் அவர் கூறினார். நான் அவரை பார்க்க சென்றபோது அவரது அலுவலகம் மூடப்பட்டு விட்டது. சபாநாயகரிடம் கடிதத்தை சமர்ப்பிக்க சொன்னார்கள். நான் கடிதத்தை தபால் மூலம் அனுப்பினேன். அவர்கள் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டனர், ஆனால் முத்திரையிடவில்லை.” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தால் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 26 மணி நேரத்தில், அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அவரது முற்றிலும் நியாயமற்ற தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து 26 மணிநேரம் கடந்துவிட்டது. இன்னமும் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் மீண்டும் அமர்த்துவதற்கான அறிவிப்பு வரவில்லை. அவரை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறாரா? நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி பங்கேற்று விடுவார் என பிரதமர் பயப்படுகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இரவு விருந்து: ஸ்டாலின் பங்கேற்கிறார்!
மேலும், ‘வெறுப்புக்கு எதிராக, அமைதியின் போர்வீரன்’ என்ற வாசகத்துடன் பொக்லைன் இயந்திரத்துக்கு முன்பாக ராகுல் காந்தி தனித்து நிற்கும் காட்சியுடன் புகைப்படம் ஒன்றை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை மீண்டும் இணைப்பதற்கான செயல்முறை வருகிற திங்கள்கிழமை தொடங்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத மக்களவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கடந்த ஜூலை 26-ம் தேதி நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் ஆகஸ்ட் 8-ம் தேதி விவாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
