கேரளாவில் உள்ள கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் ஏராளமான கோயில்களை திருவிதாங்கூர் தேவஸ்தானமே நிர்வாகம் செய்து வருகிறது. மற்ற கோயில்களை மற்ற தேவஸம்போர்டுகள் நிர்வகித்து வருகின்றன. அதேசமயம், கேரளாவில் பெரும்பாலான கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் வந்து வழிபாடு நடத்த தடை இருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் ேசர்ந்த மூத்த தலைவர் அஜய் தரயல் கூறுகையில், “ உருவ வழிபாடு, சிலை வழிபாடு ஆகியவற்றில் நம்பிக்கையுள்ள அனைவரையும், கோயிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இதை திருவிதாங்கூர் தேவஸம்போர்டு வாரியக் கூட்டத்திலும்  பேசுவேன். இது குறித்து வெளிப்படையாக பொதுவிவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

இதையடுத்து, மாநில தேவசம் மற்றும் சுற்றுலாதுறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், “ இந்த விஷயத்தில் தேவையில்லாத விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குருவாயூர் கிருஷ்ணன் கோயில் தவிர்த்து அனைத்து கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வழிபாடுநடத்த தடை நீக்கப்படவேண்டும். குரூவாயூர் கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்கலாம்” என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவஸ்ம் போர்டு தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ இந்த விஷயம் குறித்து ஒருமித்த முடிவு ஏதும் எடுக்க முடியாது. கோயிலின் தலைமைப் பூசாரிகள் சேர்ந்து விவாதிக்க வேண்டும். கோயில் ஆலோசனைக் குழுவினர், 4 தேவஸம் போர்டின் அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். கொச்சின் தேவஸம் போர்டு, மலபால் தேவஸம் போர்டு, கூடல்மணிக்கயம் தேவசம் போர்டு,  குருவாயூர் தேவஸம் போர்டு ஆகியவை மற்ற கோயில்களை நிர்வகித்து வருகின்றனர். மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு பார்த்து கோயிலுக்குள் நுழைய தடைவிதிக்கும் முறை இல்லை. சபரிமலை ஐயப்பன் கோயிலில்கூட மதத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது இல்லை. இன்னும் குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டுமே இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது” என்றார்.