மும்ைபயின் தெற்குப் பகுதியான பெஹந்தி பஜாரில் 5 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென நேற்று இடிந்து விழுந்தது. இதில் வசித்தவர்களில் 12 பேர் பலியானார்கள், 14 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மும்பையின் தெற்குப் பகுதியில் பெஹந்தி பஜார் அமைந்துள்ளது. அங்குள்ளபக்மோதியா தெருவில் ஏராளமான முஸ்லிம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த தெருவில் நூற்றாண்டுகள் பழைமையான அடுக்குமாடிக் 5 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது.  அதில் ஏறக்குறைய 9க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த குடியிருப்பில் வசித்தவர்கள் பெரும்பாலும், கீழ்நடுத்தர வர்க்க பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த குடியிருப்பின் கீழ்தளத்தில் 6 குடோன்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி அளவில் திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் வசித்தவர்கள் இடுபாடுகளில் சிக்கி அலறினர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக மும்பை மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக 90 பேர் கொண்ட பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர், மண் அள்ளும் எந்திரங்கள்,ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதமாக நடந்தன.

இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 14 பேரை சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர், மேலும், உயிருக்கு போராடிய 14 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இது குறித்து மும்பை தெற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் மனோஜ் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ இந்த குடியிருப்பில் 9 குடும்பங்கள் வசித்து வந்தாக தகவல்கள் கிடைத்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் ஏராளமான கான்கிரீட்கம்பிகள் இருப்பதால், மீட்பு பணிகள் கவனமாக நடக்கிறது. மீட்புப்படையினர் சம்மட்டியாலும், எந்திரங்களாலும், கான்கிரீட் கற்களை உடைத்து வருகின்றனர்.கிரேன், புல்டோசர்ஸ், மண் அள்ளும் எந்திரங்கும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுவரை 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 14 பேர் சிகிச்சைக்காக ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் ஆவர்’’ என்று தெரிவித்தார்.

உயிருக்கு முக்கியத்துவம்

மீட்புப்பணி நடக்கும் இடத்தை மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை உயிருடன் மீட்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். மீட்புப்பணிகள் முடிந்தவுடன், அரசு இது குறித்து விசாரணைக் குழு அமைத்து, கட்டிடம்  இடிந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்யும். தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

என்ன காரணம்?

மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையில் அனைத்து கட்டிடங்களும் நன்றாக மழையில் நனைந்துள்ளன. தற்போது இடிந்துள்ள இந்த கட்டிடம் 117 ஆண்டுகள் பழைமையானதாகும். இந்த கட்டிடத்தில் 13 வீடுகளும், ஒரு கட்டிடம் வர்த்தகரீதியான வாடக்கைக்கும் விடப்பட்டு இருந்தது. இந்த கட்டிடத்தை சீரமைக்கும் பணியில் ‘தி சைபி புர்ஹானி அப்லிப்ட்மன்ட் டிரஸ்ட்’(எஸ்.பி.யு.டி.) ஈடுபட்டு வந்துள்ளது. மேலும், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 28, ம20 தேதிகளில் மும்பை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸில், கட்டிடம் மிகவும் சிதிலமடைந்துவிட்டது, இங்கு வசிப்பவர்கள் மாற்று இடத்துக்கு செல்லவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மும்பையில் பெய்த தொடர்மழை பெய்ததால், அதன் காரணமாக, கட்டிடம் இடிந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விசாரணை அறிக்கை வௌிவந்த பின்பே முழுமையான காரணங்கள் தெரிய வரும்.