9.3 கோடிக்கும் அதிகமான பான் கார்டு எண்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 30 கோடி பான் கார்டு வைத்து இருப்பவர்ளில் 30 சதவீதம் அதாவது, 3 கோடி பேரின் கார்டுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கடந்த 5-ந்தேதி நிலவரப்படி அதாவது வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யகடைசி நாளான அன்று, 9.3 கோடிக்கும் அதிகமாக பான்கார்டுடன் ஆதார் இணைத்தவர்கள் பதிவு செய்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.ஜூலை 1-ந்தேதியில் இருந்து ஆதார் எண்ணுடன், பான்கார்டை இணைத்திருந்தால் மட்டுமே வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியும் என அரசு அறிவித்து இருந்தது. அதன் பின்  இம்மாதம் 31-ந்தேதி வரை இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம் என அவகாசம் அளிக்கப்பட்டது. வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, ஆதார் எண் அல்லது ஆதாருக்கு விண்ணப்பித்து இருந்தால் அதற்குரிய இணைப்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.