91 வயது ஆகும்போது நம்மில் எத்தனை பேர் உயிரோடு இருப்போம்.அப்படியே இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்போமா அல்லது படுத்த படுக்கையாக மற்றவர்களுக்கு பாரமாக இருப்போமா என்று கூட தெரியாது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த 91 வயது பாட்டி ஒருவர் இந்த வயதிலும் அசராமல், ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் கட்டிட வேலை செய்து வருகிறார்.

கடந்த 60 வருடங்களாக கட்டிட வேலைக்குச் செல்லும் காத்ரினா பாட்டி ஒரு நடமாடும் அதிசயம்தான். தினமும் காலையில் 5 மணிக்கு எழும் அவர் தனது வழக்கமான ஆட்டோ டிரைவருடன் கட்டிடப்பணி நடக்கும் இடத்துக்கு நேரம் தவறாமல் ஆஜராகிவிடுவாராம். காலை உணவு மூன்று காபி. ‘வயது எனக்கு இப்போது வரை ஒரு பிரச்சினையே இல்லை. சாகும் வரை நான் இந்த வேலையை மனம் தளராமல் செய்துகொண்டே இருக்கவேண்டும்’ என்கிறார் இந்தப் பாட்டி.

‘கடந்த 60 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததாக எனக்கு நினைவில்லை. அதற்காக எங்கே கட்டிட வேலை இருந்தாலும் எனக்குதான் முதலில் அழைப்பு வரும். என்னுடன் வேலை பார்க்கும் என் மகள் பிலோமினா உட்பட அனைவரையும் மிரட்டி வேலை வாங்கும் அதிகாரத்தையும் எனக்கே எப்போதும் மேஸ்திரிகள் வழங்கிவிடுவார்கள்’என்று ஆச்சர்யப்படுத்துகிறார் காத்ரினா பாட்டி.

இத்தனை வருட சம்பாத்தியத்தில் தனது 4 பிள்ளைகளுக்கு சொந்த வீடு கட்டிக்கொடுத்துள்ள காத்ரினா பாட்டிக்கு 9 பேரக் குழந்தைகளும் 14 கொள்ளுப்பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். தான் சம்பாதிப்பதை அவர்களுக்கு மனநிறைவோடு செலவு செய்கிறார் இந்த ராட்சச மூதாட்டி.