Modi govt turns 9: பணிவு மற்றும் நன்றி உணர்வுடன் நிறைந்து இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!!
பாஜகவின் ஆட்சியின் ஒன்பது ஆண்டுகால வெற்றிப் பயணத்தை பிரதமர் மோடி பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளார்.
பாஜக கடந்த 2014 மே 26 ஆம் தேதி மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜக மட்டும் தேசிய அளவில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. இதற்கு முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக சுமார் 166 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்து இருந்தது.
கடந்த மே 26ஆம் தேதியுடன் பாஜக ஒன்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. பாஜக ஆட்சி மற்றும் வெற்றிகரமான திட்டங்கள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் பிரதமர் மோடி, ''தேசத்தின் வளர்ச்சிக்காக 9 ஆண்டுகள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாஜக செய்துள்ளது. எங்களின் வளர்ச்சிப் பயணம் குறித்து அறிந்து கொள்ள, https://nm-4.com/9yrsofseva என்ற இணையத்தை பார்வையிட அனைவரையும் அழைக்கிறேன். அரசின் பல்வேறு திட்டங்களால் மக்கள் எவ்வாறு பயனடைந்துள்ளனர் என்பதை எடுத்துரைக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. #9YearsOfSeva'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''இன்று நாங்கள் ஒன்பது ஆண்டு சேவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளோம். நான் பணிவுடன், நன்றியுடன் இதை உணருகிறேன். நாட்டு மக்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு அனைத்து முடிவுகளும், செயல்களும் இருந்தன. இந்தியாவை மேலும் வலுவாக்க, வளர்ச்சியை கட்டமைக்க தொடர்ந்து கடுமையாக உழைப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டுகள் சாதனைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திங்கள் கிழமை நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் கூட்டம் நடத்தி இருந்தனர். மே 30ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடத்துவதற்கு பாஜக முடிவு செய்துள்ளது. நடப்பாண்டின் இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் அந்த மாநிலத்தில் பிரதமர் மோடி பேரணியில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
இது மட்டுமின்றி, மே 30 முதல் ஜூன் 30 வரை, நாடு முழுவதும் சுமார் 50 பேரணிகள் நடத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி சுமார் ஆறுக்கும் மேற்பட்ட பேரணிகளில் உரையாற்றுகிறார். இது தவிர, பிற பேரணிகளில் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.