என்ன நடக்கிறது கடவுள் தேசத்தில்; மேலும் மேலும் அதிர்ச்சி தகவல்கள்; கோழிக்கோட்டில் நடந்தது என்ன?
கோழிக்கோடு விளாங்காட்டில் உள்ள வாணிமேல் பஞ்சாயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த பேரிழிவு ஏற்படுத்திய சோகமே இன்னும் நீங்காத நிலையில் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோழிக்கோடு விளாங்காட்டில் உள்ள வாணிமேல் பஞ்சாயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன, இரண்டு பாலங்கள் மற்றும் பல கடைகள் இடிந்து விழுந்தன. கோழிக்கோடு வடக்கு பகுதியில், குறிப்பாக வாணிமேல் பஞ்சாயத்து விளாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆதிச்சிப்பாரா, மஞ்சச்சள்ளி, குட்டல்லூர், பன்னியேரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து 9 முறை நிலச்சரிவு ஏற்பட்டது.
வயநாடு நிலச்சரிவு.. புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை.. ஆனா இதை செய்திருந்தால் பேரழிவை தடுத்திருக்கலாம்..
கனமழை காரணமாக மாஹே ஆற்றின் பிறப்பிடமான புல்லுவை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் ஆற்றங்கரையில் இருந்த 12 வீடுகள் முற்றாக இடிந்து விழுந்ததுடன், பல வாகனங்களும் சேதமடைந்தன.
நிலச்சரிவு சத்தம் கேட்டு மற்றவர்களுக்கு உதவ வந்த குளத்திங்கல் பகுதியைச் சேர்ந்த மேத்யூ என்பவர் தற்போது காணாமல் போனதாக கூறப்படுகிறது.. இந்த நிலச்சரிவால் விளாங்காடு நகரில் உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆற்றின் 5 கிலோமீட்டர் நீளம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. பல கடைகள் மற்றும் இரண்டு பாலங்கள் அழிக்கப்பட்டன, பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் மின்சாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டம், குட்டிக்காடு மருதோன்கரா கிராமத்தின் பசுகடவ் பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, தெருக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கடந்தாரா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், பரக்கண்டி, முக்கம், பீடிகப்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.